496. 'ஸ்பெக்ட்ரம்' ஓர் உலக மகா சுருட்டல் விவகாரமா?
ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) உரிமங்கள் வழங்கிய விவகாரம் MOTHER OF ALL SCANDALS என்று சொல்லுமளவுக்கு, போஃபோர்ஸையும் மிஞ்சும் வண்ணம் உள்ளது
சமீபத்தில் ராஜ்யசபாவில், 2G ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டது தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்பியது. இப்பிரச்சினை குறித்து ஒரு கூட்டு பாராளுமன்றக் குழு (JPC) விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி கட்சி உறுப்பினர் முன் வைத்துள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் அமர்சிங் ஸ்பெக்ட்ரம் குளறுபடி பற்றி ஏற்கனவே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
எதிர்பார்த்தது போல, திமுக உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு "பலத்த" எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதிமுகவின் மைத்ரேயன் கூறியபடி அரசுக்கு 100000 கோடி வருமான இழப்பு என்பது அதீதமாக இருந்தாலும், அரசுக்கு கிட்டத்தட்ட 60000 கோடி இழப்பு என்ற கணக்கீடு சரியான ஒன்றே. மைத்ரேயன் திமுக அரசின் தலையில் ஆணி அடிக்கும் விதமாக, "இந்தத் தொகையை வைத்து, இப்போது ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் ரேஷன் அரிசியை, அடுத்த 140 ஆண்டுகள் இலவசமாகவே வழங்க முடியும்" என்று ஒரே போடாக போட்டார் :) [இந்தத் தொகையில் 15 ராமர் சேது கால்வாய் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது கூடுதல் தகவல்]
அமைச்சர் ராஜா தான், தனக்கு முன்னால் இருந்த அமைச்சரின் வழிமுறைகளிலிருந்து மாறுதலாக எதுவும் செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும், ஏனெனில் முன்னர் இருந்தவரும் திமுக அமைச்சரே என்றும் மைத்ரேயன் பேசினார்.
அதோடு, மத்திய கண்காணிப்புக் கமிஷன் (Central Vigilance commission) ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புயுள்ளதையும், இந்தப் பிரச்சினை குறித்தான பொது நல வழக்கு ஒன்றை தில்லி உயர் நீதிமன்றம் அனுமதித்திருப்பதையும் மைத்ரேயன் சுட்டிக் காட்டினார்! ஜனதா தளம் (U) வைச் சார்ந்த சரத் யாதவும் ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு முழுமையான பாராளுமன்ற விவாதம் மிக அவசியம் என்று கூறினார்.
மொத்த அலைக்கற்றைக்கு ஸ்வான் அரசுக்கு கொடுத்தது 1537 கோடி, அதில் 45%-ஐ எடிசலாட்டுக்கு விற்ற கணக்குப்படி பார்த்தால், ஸ்வான் பெற்ற அலைக்கற்றையின் நிகர மதிப்பு 10000 கோடி, அதாவது ஆறரை மடங்கு லாபத்தில் ஸ்வான் விற்றுள்ளது, மக்கள் பணம் தனியாருக்கு இப்படி தாரை வார்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது
இதில் ஊழல் நடந்துள்ளதோ இல்லையோ, அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு அமைச்சகம், இந்த விசயத்தில் சரியாக ஆய்ந்து முடிவுகள் எடுக்கவில்லை என்பது தெளிவு. மேலும், வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்து விடலாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.
தொலைத் தொடர்புடன் தொடர்பில்லாத, அனுபவமில்லாத (ரியல் எஸ்டேட்) நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சைக்கு ஒரு முக்கியக் காரணம். தொலைத் தொடர்பு கம்பெனிகளின் கார்டலை (cartel) உடைக்க இது உதவும் என்று அமைச்சர் இதற்குக் காரணம் கூறியிருப்பதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வது நம் உடம்புக்கு நல்லது, இல்லையெனில் பிளட் பிரஷர் எகிறி விடும் ;-)
மேலும், பிரதமர் இப்பிரச்சினை குறித்து தொலைத் தொடர்பு அமைச்சகதுக்கு எழுதியிருப்பதாக கூறப்படும் கடிதம் பற்றியும் குழப்பம் நிலவுகிறது. அக்கடிதம் வெளியிடப்படவேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தியுள்ளது!
முதல்வர், ராஜா ஒரு தலித் என்பதால், இப்பிரச்சினையை வேண்டுமென்றே பெரிதாக்குகிறார்கள் என்கிறார்! இப்படி சாதியை இதில் நுழைப்பது சரியா? ஒரு மத்திய அமைச்சரின் நடவடிக்கை, அவர் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும் (அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்ற சூழலில்) ஜனநாயகத்தில் கேள்விக்குட்பட்டதே! மேலும், ராஜா தன்னை தற்காத்துக் கொள்ள முடியாத ஏழ்மைச் சூழலில் இருக்கிறாரா என்ன ? இது ஒரு புறமிருக்கட்டும். உண்மையான நிலவரத்தையும், சில தகவல்களையும் பார்ப்போம்.
100000 கோடி என்பது, இந்தியாவின் தேசிய வருமானத்தில் நாற்பதில் ஒரு பங்கு, இது பட்ஜெட் நிதிப்பற்றாக்குறையில் (financila deficit) நான்கில் மூன்று பங்கு. அலைக்கற்றையின் உரிமங்கள் பெற்ற 3 இந்திய நிறுவனங்கள் (ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், டாடா டெலிசர்வீஸஸ்) தங்கள் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்றபோது தான், அரசுக்கு ஏற்பட்ட பெரும் வருமான இழப்பு தெரிய வந்தது. அதாவது, வாங்கியதை விட கிட்டத்தட்ட ஆறுமடங்கு விலைக்கு விற்றிருக்கிறார்கள்!
மேலே குறிப்பிடப்பட்ட மூன்றில் முதல் 2 கம்பெனிகளுக்கும், இந்த அலைக்கற்றை உரிமம் தவிர்த்து, சொல்லிக் கொள்ளும்படியாக சொத்து (assets) எதுவும் இல்லாத நிலையில், 1651 கோடிக்கு விற்கப்பட்ட ஒவ்வொரு உரிமத்தின் மார்க்கெட் விலை 10000 கோடிக்கும் மேல் என்பது தான் நிஜம்.
இது இப்படியிருக்க, நிதியமைச்சகமே, அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை (தனது உள்தொடர்பு குறிப்பொன்றில்) ஒப்புக் கொண்டுள்ளது! அதாவது, அக்குறிப்பு, இழப்பு 22466 கோடி என்கிறது. இல்லை, மூன்று மடங்கு நஷ்டம் என்று சந்தைச் சூழலை வைத்து வல்லுனர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ, 22000 கோடி என்பதே பெரும் வருமான இழப்பு தானே! அது போல, பாரதி, வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அலைக்கற்றையிலும், அரசுக்கு சுமார் 20000 கோடி வருமான இழப்பே. இது குறித்து அமர்சிங் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் இப்போது வெளிவந்துள்ளன, அமர்சிங் ரிலயன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சார்பாகவே இதைச் செய்திருந்தாலும் :-)
அது போல, டெலிகாம் உரிமங்கள் ஒரு போதும் இந்தியாவில் ஏலம் முறையில் விற்கப்பட்டதில்லை என்பது தவறான தகவல்! நான் மேலே குறிப்பிட்ட 1651 கோடி என்பது, 2001-ல் நடந்த ஏலத்தின் வாயிலாகவே நிர்ணயிக்கப்பட்டது. 7 வருடங்கள் கழித்து அதே விலைக்கு அரசு விற்பது சரியா/முறையா (அதுவும் FIRST COME FIRST SERVE அடிப்படையில், அடிதடி சூழலில்) என்பது முக்கியமான கேள்வி!
பிஜேபி ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட (1999 ஆண்டுக்கான) நேஷனல் டெலிகாம் பாலிசியில் (NTP99) குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படியும் (guidelines), TRAIயின் பரிந்துரைகளின்படியும் தான் என்று அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலாது. NTP99-யிலோ TRAI வெளியிட்ட பரிந்துரைக் குறிப்புகளிலோ, உரிமங்கள் வழங்க FCFS (First Come First Serve) பாலிஸி செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை! பொது ஏலத்தை விட FCFS சிறந்தது என்பதை TRAI அங்கீகரிக்கும் என்று எதிர்பார்ப்பது சற்று அதிகபட்சம் இல்லையா? :-)
மேலும், உரிமங்கள் பெறுவதற்கான (பூர்த்தி செய்யப்பட்ட) மனுக்களை அமைச்சக அலுவலகத்தில் அளிப்பதற்கு 72 மணி நேரக் கெடுவே தரப்பட்டது என்பதும் குறிப்பிடவேண்டியது. உரிமங்கள் வழங்கிய தினத்தில், சன்சார் பவனில் நடந்த கேலிக்கூத்தையும், அடிதடியையும் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இப்படி வந்திருந்தது!
On January 10, at 2.45 pm, the DoT posted an announcement on its website saying letters of intent would be issued between 3.30 pm and 4.30 pm and that application fees (worth over a thousand crore rupees in many cases) would have to be paid immediately by demand draft with supporting documentation. Licences with spectrum were given to those who deposited their fees first by even a fraction of a second. In the mad melee, well-heeled CEOs were manhandled by hired bouncers and DoT staffers were bashed up before the cops turned up, late as usual.
அன்று நடந்த பெருங்குழப்பத்தை இந்து நாளிதழ் விவரிப்பதையும் பாருங்கள்:
On Thursday it was total pandemonium at Sanchar Bhawan, the office of the Department of Telecom, as representatives of wannabe telecom companies literally got into fist fights and blows in a bid to be the first to get the letter of intent.
After keeping nearly 46 applicants on tenterhooks for almost three months, when DoT on Thursday announced that letters of intent (LIs) will be issued at 3.30 p.m., all hell broke loose as the companies made a beeline to the second floor of Sanchar Bhawan where the letter was being issued.
The clamour was so shrill that a representative of one of the applicants got a hired goon to ensure that it was his company which was the first to enter the gates. What followed could make Bollywood stunts look pale in comparison as some of the company representatives were physically thrown out of the line by rival applicant company.
இது தான், அரசுக்கு உரிமையான அரிதான/விலைமதிப்பு மிக்க ஒரு வளத்துக்கு உரிமங்கள் வழங்கும் முறையா? மற்றொரு விஷயம், TRAI தலைவரே இந்த விவகாரத்தில் டெலிகாம் அமைச்சகத்துக்கு எதிராக பேசியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மத்திய கண்காணிப்புக் கமிஷனும் (Central Vigilance commission), CAG -வும் (Comptroller & Auditor General of India) முதல்கட்ட விசாரணை செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது. நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்படுகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை. கடைசியாக வந்த செய்திகளின்படி, 3G ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஏலம் முறையில் வழங்கப்பட உள்ளன என்பது தெரிகிறது !!! ஏன் 2G அலைக்கற்றை உரிமங்கள் வழங்கியபோது இந்த ஞானோதயம் வரவில்லை என்பது நியாயமான கேள்வி தானே ???
--
எ.அ.பாலா